தீவிர சிவபக்தரும் நடிகருமான மயில்சாமி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு இரவு முழுவதும் வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார். இவரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் "எனக்கு பேச்சே வரவில்லை, இடிதாக்கியது போல ஒரு நிலையில் இருக்கிறேன். கடைக்கு போனால் கூட, மயில்சாமியின் வீட்டுக்கு போய் பேசிவிட்டுத்தான் நான் வருவேன். என்னை அவன் மாமான்னு ரொம்ப ஆசையாக கூப்புடுவான்" என்றார்.
மேலும் "அவருடைய மனைவி அண்ணா வாங்க என்று என்னை அழகாக அழைப்பார். மயில்சாமி என்பவர் ஒரு சாதாரண மனிதன் இல்லை. கர்ணணைப்பற்றி சொல்லுவார்கள், அள்ளிக் கொடுத்தவன் கர்ணன் என்று அதுப்போலத்தான் மயில்சாமி. அவர் பெரிய எம்ஜிஆர் பக்தர், இதனால் எப்போதுமே தானம், தர்மம் என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார்" எனவும் கூறியுள்ளார்.
மேலும் "மழை வந்து வெள்ளம் வந்துவிட்டால், உடனே அனைவருக்கும் சாப்பாடு பொட்டலம் தருவார். அப்படி அவருக்கு ஒரு வெள்ளந்தியான மனசு. ஒரு அற்புதமான நடிகன், ஒரு அற்புதமான மனிதன். அவன் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், நானும் மயில்சாமியும் ஒன்றாக இருந்து தான் சாப்பிடுவோம், ஒன்றாக தூங்குவோம்.
அவ்வாறு ஒரு சகோதரனாக, மைத்துனனாக, வள்ளலாக வாழ்ந்தவன் மயில்சாமி. மூன்று நாளுக்கு முன் தொலைபேசியில், சிவராத்திரிக்கு கோவிலுக்கு போக அழைத்தார். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றேன். அவன் மிகப்பெரிய சிவபக்தர், சிவராத்திரி நாள் அதுவுமாக சிவன் இவரை அழைத்துக் கொண்டார். மயில்சாமியின் ஆன்மா சிவன் நிழலில் இளைப்பாறட்டும்" என எம்.எஸ். பாஸ்கர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அவர் வீட்டிற்கு சென்று மயில்சாமியின் உடலுக்கு அருகில் நின்று நீண்டநேரமாக கதறிக் கதறி கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றார் எம்.எஸ்.பாஸ்கர். இந்தக் காட்சியானது அங்கிருந்த பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது. இதன் வாயிலாக இவர்கள் இருவரும் அந்தளவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளார்கள் என்பது புரிகின்றது.
Listen News!