ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகமானது நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தின் பெடாபுரம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மிரெட்டி சீனு. இவர் தனது சகோதரர் ராஜு உடன் பெடாபுரத்தில் உள்ள தியேட்டருக்கு அவதார் 2 படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்தபோது லக்ஷ்மிரெட்டி சீனுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது
இதையடுத்து தியேட்டரிலேயே சுருண்டு விழுந்த அவரை மீட்டு உடனடியாக பெடாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அவரின் சகோதரர் ராஜு. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.அவதார் 2 படம் பார்க்க சென்று மாரடைப்பால் மரணமடைந்த லக்ஷ்மிரெட்டி சீனுவுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். லக்ஷ்மிரெட்டி சீனுவின் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் இதே போல ஒரு நிகழ்வு அவதார் படத்தின் முதல் பாகம் வெளியாகியபோதும் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு அவதார் படம் பார்க்க சென்ற தைவானை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!