தெற்கு காஷ்மீரில் தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் ஆப் காஷ்மீர் என்ற தீவிரவாத அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட அச்சன் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் சர்மாவின் ஏழு வயது மகள் தீக்ஷாவுக்கு கல்விக்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்க இருப்பதாக நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சஞ்சய் சர்மா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் விசாரித்துச் சென்றனர். பலர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற கவலையில் இருந்தனர்.
ஆனால், இவற்றை எல்லாம் விட அங்கு கவலையுடன் அமர்ந்து இருந்த சிறுமி தீக்ஷாவின் முகம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த சிறுமியின் படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் வேறு யாருமில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட சஞ்சய் சர்மாவின் மகள். கவலை நிறைந்த முகத்துடன், தாய்க்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் திகைத்து, கவலையுடன் காணப்பட்டார்.
இதை கவனித்த நடிகர் அனுபம் கேர் சிறுமி தீக்ஷாவின் படிப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்பதாக குளோபல் காஷ்மீரி பண்டிட் அமைப்புக்கு கடிதம் எழுதினார். அந்த சிறுமி எவ்வளவு படிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ படிக்கட்டும், அதற்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தீவிரவாதிகளின் செயலால் சஞ்சய் சர்மாவின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் இன்று அனாதையாக நிற்கின்றனர். திக்ஷாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரையும் கலங்க வைத்துள்ளது. பலரும் அந்தக் குடும்பத்திற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வரும் உலக காஷ்மீர் பண்டிட் அமைப்பின் தலைவரான சுரிந்தர் கவுல், சஞ்சய் சர்மாவின் குடும்பத்தை தொடர்பு கொண்டு, உதவி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் போலீசார் செவ்வாய்கிழமை காலை சஞ்சய் சர்மாவைக் சுட்டுக் கொன்ற தீவிரவாதியை என்கவுன்டரில் கொன்றதாக தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி முன்பு ஹிஸ்புல் முஜாகிதீனுடன் தொடர்பில் இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!