• Nov 15 2024

படுத்த படுக்கையில் நடிகர் பாபு காலமானார்... கண்ணீரில் தத்தளிக்கும் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாகவே அடுத்தடுத்து பல திடீர் உயிரிழப்புக்கள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து நேற்றிரவு நடிகர் பாபு காலமானார். அதாவது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர் தோழன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பாபு.இப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 

மேலும் 'பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு, பெரும்புள்ளி, தாயம்மா, மனசார வாழ்த்துங்களேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார். கிராமத்து கதைகளில் தனது யதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.


இந்நிலையில் 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது மாடியில் இருந்து குதிக்க வேண்டிய காட்சியில் டூப் போட்டுக் கொள்ளாமல் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக கீழே குதித்து இருக்கிறார். 

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தவறுதலாக வேறு இடத்தில் நடிகர் பாபு விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியது. இதனையடுத்து இவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில்  இவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இவருக்கு தொடர் சிகிச்சைகள் அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் பாபு காலமானார். 

இவ்வாறாக சுமார் 30 வருடங்களுக்கு மேலாக படுத்த படுக்கையில் இருந்த பாபு உயிரிழந்தமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement