தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவரின் நெருங்கிய நண்பர் தான் வி.எம். சுதாகர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்களாக இருந்து வருகின்றனர்.ரஜினி நடிகராக வந்தாலும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக செயல்பட்ட சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது வி.எம்.சுதாகரை அழைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை பார்த்துக் கொள்ள கூறியிருந்தார்.அதன் முதல் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம். சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம் சுதாகர் செயல்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக அவருக்கு கிட்னி கோளாறு பிரச்சனை இருந்து வந்தது. அதற்கான செலவை ரஜினிகாந்த் ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி.எம் சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். 71 வயதாகும் வி.எம்.சுதாகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!