தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழ் திரையுலகின் மூலம் அடையாளப்பட்டவர் நடிகர் சரத்பாபு. கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு எந்தவித அலட்டலும் இல்லாமல் நியாயம் செய்தவர் சரத்பாபு.
குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்துவிட்டால் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை பலருக்கு எழுந்துவிடும் சூழலில் சரத்பாபுவோ ஹீரோவாக நடிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். குணசித்திர கதாபாத்திரங்களில் தன்னைப்போல் யாரும் நடிக்கமாட்டார்கள் என்ற பெயரை எடுப்பதற்கு முனைப்போடு செயல்பட்டவர். அதன் காரணமாகவே கிட்டத்தட்ட 30 வருடங்கள் மிகச்சிறந்த குணசித்திர நடிகராக வலம் வந்தார்.
எத்தனையோ நடிகர்களோடு அவர் நடித்திருந்தாலும் ரஜினியோடு அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டானவை. குறிப்பாக முத்து, அண்ணாமலை படங்களை பார்த்த 90ஸ் கிட்ஸ் சரத்பாபு உண்மையிலேயே ரஜினிகாந்த்தின் நண்பர்தானோ என நினைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது
தமிழில் கடைசியாக வசந்தமுல்லை படத்திலும், தெலுங்கில் கடைசியாக வக்கீல் சாப் படத்திலும் நடித்திருந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்துவருவதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஹைதராபாத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். சூர்யா அவரது இல்லத்திற்குச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!