நடிகர் விஷால் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படம் வெளியாகி திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகின்றது. இருப்பினும் இப்படமானது பல தடைகளைத் தாண்டித்தான் ரிலீஸ் ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அதாவது பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால் தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது.
பின்னர் மார்க் ஆண்டனி படத் தயாரிப்பிற்கும் விஷாலிற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமையினால் அந்த படத்தை வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாது விஷாலின் வங்கிக் கணக்குகள், சொத்து விபரங்கள் போன்ற நீதிபதியினால் கோரப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் விஷால் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது விஷாலின் வங்கிக் கணக்குகள், மற்றும் சொத்து விபரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த வழக்கு விசாரணை செப்டெம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!