• Nov 19 2024

பிரபல தொழிலதிபர் மீது வழக்குத் தொடுத்த நடிகை அமலாபால்- மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அமலாபால், இதனைத் தொடர்ந்து மைனா, தலைவா, தெய்வ திருமகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழைத் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.

இவர் கடந்த 2014 ம் ஆண்டு டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இரண்டு ஆண்டுகளிலேயே அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆடை போன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த'டாஸ்லின் தமிழச்சி' என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் 'மான்ஜான்ஸ்' டான்ஸ் பயிற்சி அக்கடமியில் அமலாபால் பயிற்சி எடுத்தார்.

அப்போது, அழகேசன் என்பவர் அமலாபாலிடம், மலேசியா செல்லும்போது இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்த வேண்டும் என்று பேசியுள்ளார். இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், இந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement