2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். இதன் பின்னர் 'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் இப்படத்தினையடுத்து நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் வித்யா பாலன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல விடயங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். அதாவது "நான் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் தான் நடிக்கிறேன். எனது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி விடுகின்றது.
நான் கமர்ஷியல் படங்களை தவிர்த்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது தான் அந்த எதிர்பார்ப்புக்கு காரணம். ஆனாலும் நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் இன்னமும் எனக்கே ஒரு தெளிவு இல்லை.
மேலும் மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதன் மூலம் தான் எனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகின்றேன். அதுமட்டுமல்லாது என் மீது ஒரு முத்திரை குத்தி இமேஜ் வட்டத்துக்குள் என்னை வைத்து விட்டார்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும் வித்யா பாலன் "கதாநாயகர்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் அப்போது இருந்தது. அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ஓடியதை பார்த்தோம். ஆனால் இப்போது ஹீரோ, ஹீரோயினை மட்டும் பார்த்து படம் பார்க்கும் காலம் மலையேறி விட்டது. படத்தில் நல்ல கரு இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்'' எனவும் கூறியுள்ளார்.
Listen News!