’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு முன்பு அதிக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை த்ரிஷா, ‘பொன்னியின் செல்வன்’ வெற்றி காரணமாக அதன்பின் பிஸி ஆகிவிட்டார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய்யுடன் அவர் நடித்த ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ என்ற படத்தின் நாயகியும் த்ரிஷா தான். மேலும் அவர் மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி நடித்துவரும் ’ஐடென்டிட்டி’ என்ற படத்திலும் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிசியாக இருக்கும் த்ரிஷா தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் உடன் நடிப்பதற்கு ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை அஜித் நடித்த ’ஆரம்பம்’ ’பில்லா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கிட்டத்தட்ட த்ரிஷா இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே த்ரிஷா ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் நிலையில் அவர் பாலிவுட்டில் மீண்டும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் த்ரிஷாவுக்கு குவிந்து வரும் வாய்ப்புகளை பார்க்கும்போது அவரது காட்டில் அடை மழை தான் என திரை உலகினர் கூறி வருகின்றனர்.
Listen News!