இயக்குநர் ரத்தன் லிங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘லாக். பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குனர் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கே. பாக்யராஜ் பேசியதாவது, "படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படி பல நாள் எதுவும் கிடைக்கவில்லை.
அன்று வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.
அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ?என்றான். விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார் .
அதுபோல இடையூறுகள் வருவது என்றாலும் எப்படியென்றாலும் வந்தே தீரும். இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார்.
உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று கூறியிருந்தார் .
Listen News!