தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர் சங்கமம் படத்தின் மூலமாக உலகம் பூராகவும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர். இந்நிலையில் நடிகர் ரகுமான் தற்போது தனது 55வது வயதினைப் பூர்த்தி செய்துள்ளார்.
இதனையொட்டி ரகுமானின் ரசிகர்கள் பயனுள்ள வகையில் சிறப்பாக கொண்டாடி அசத்தியுள்ளனர். அதாவது கேரளாவில் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். அதுமட்டுமல்லாது அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
மேலும் அங்கிருந்த பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டு ரகுமான் நடித்த படங்களின் பாடல்களை பாடி அவருக்கு எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை உணர்த்தினார்கள். அதில் ஒரு முதிய பெண்மணி அங்கிருந்த ரசிகர் மன்ற தலைவரிடம் தான் ரகுமானிடம் பேச விரும்புவதாக கோரிக்கை வைக்க, உடனடியாக இந்த தகவல் ரகுமானுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அடுத்த நிமிடமே வீடியோ காலில் வந்த ரகுமான் அங்கிருந்த ஒவ்வொருவருடனும் பேசி அவர்களிடம் நலம் விசாரித்தார். அதில் இன்னொரு பெண்மணி ரகுமானின் பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என விரும்ப தனது வீட்டில் அடுத்த அறையில் இருந்த குழந்தையை தூக்கி வந்து வீடியோ காலில் காட்டி அந்த பெண்மணியின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் ரகுமான்.
இதேபோன்று கேரளாவில் பல இடங்களில் ரகுமானின் ரசிகர்கள் பலருக்கும் பலவிதமான சமூக உதவிகளை செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!