• Nov 14 2024

வெளியானது ஐஸ்வர்யா ராஜேஷ்- ஜித்தன் ரமேஷ் நடித்த 'ஃபர்ஹானா' திரைப்படம்... திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமாக உருவாகியுள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். 

இப்படமானது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் வேற்றுகிரக வாசிகள் போலவும் சித்தரித்து வரும் சினிமாக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப்  பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி அமைந்திருக்கின்றது. இஸ்லாமிய அமைப்புகள் பலவும் இப்படத்துக்கு தடை கோரிய நிலையில் இப்படம் எப்படி இருக்கின்றது என்பதனை திரைவிமர்சனத்தின் மூலமாக நோக்கலாம்.


கதைக்களம் 

அந்தவகையில் படத்தின் கதையை எடுத்து நோக்கினால் கட்டுக்கோப்பான இஸ்லாமிய தந்தை, அன்பான கணவர், மூன்று குழந்தைகளை கொண்டு, ஐந்து வேளை தொழுகை உடன்  கூடுதலாக ஆறாவது வேளை தொழுகை செய்து வாழும் சராசரி இஸ்லாமிய குடும்பப் பெண் 'ஃபர்ஹானா' வாக ஐஸ்வர்யா ராஜேஷ் திகழ்கின்றார். படித்த பெண்ணான ஃபர்ஹானா, குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல், மருத்துவ செலவை ஏற்க முடியாமல் திணறும் குடும்பத்துக்கு உதவ தன் குடும்ப தடைகளை உடைத்து, வீட்டினரை ஒருவாறாக சம்மதிக்க வைத்து வேலைக்கு செல்கிறார்.

அந்தவகையில் வங்கிக் கடனுக்காக கஸ்டமரிடம் பேசும் கஸ்டமர் கால் சர்வீஸ் வேலையில் சேரும் ஃபர்ஹானா தன் அலுவலகத்தில் மற்றொரு துறையில் அதிக சன்மானம் கிடைப்பதைப் பார்த்து அங்கு மாற்றலாகி செல்ல அவர்களிடம் கேட்கிறார். அங்கு வற்புறுத்தி மாற்றலாகி அவர் சென்ற பின் தான் அவருக்குத் தெரிய வருகிறது அது பிரென்ஷிப் கால் எனப்படும் நட்புலகம் கால் சேவை. 

அதாவது தனியாக உணர்பவர்கள் முகம் தெரியாத எதிரில் இருப்பவர்களிடம் பெரும்பான்மை உரையாடலில் ஆபாசத்தை அள்ளி வீச, அங்கு கனிவான தன் குரலின் உணர்வறிந்து பேசும் மற்றோரு குரலை சந்திக்கிறார். அந்த நபர் ஃபர்ஹானாவின் ரெகுலர் அழைப்பாக மாற ஒரு கட்டத்தில் அந்நபருடன் தனி பிணைப்பைக் கொள்ள அந்த நபரை நேரில் சந்திக்க ஃபர்ஹானா எண்ணி அழைக்கிறார். 

ஆனால் பின்னர் தொடர்ந்து நிகழும் ஒரு அசம்பாவித சம்பவத்தால் தன்நிலை உணர்ந்து தன் முடிவை மாற்றிக் கொண்டு தன் பணியை தொடர்கிறார் ஃபர்ஹானா. இதனிடையே போனில் பேசிய அந்த நபரை ஃபர்ஹானா நேரில் சந்தித்தாரா? கணவர், குடும்பம் என பலகட்ட சிக்கல்களை தாண்டி வேலைக்கு வந்த ஃபர்ஹானாவின் நிலை பின்னர் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.


நடிப்பில் மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

அதாவது அன்பான கணவர், ஸ்ட்ரிக்ட்டான இஸ்லாமிய தந்தை ஆகியோருக்கு இடையே ஹேண்ட்பேக் சுமந்து  கொண்டு வேலைக்கு செல்லும் பெண்ணை  பார்த்து ஏங்கும் பக்கத்து வீட்டு இஸ்லாமிய பெண் ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கின்றது. 

மேலும் பல தடைகளை உடைத்தது வேலைக்கு செல்வது, காலருடன்  ஏற்பட்ட பிணைப்பை பதின்ம வயது சிறுமியை போல் மாறி வெளிப்படுத்துவது, அந்த நபரின் உண்மை நோக்கம் அறிந்து குடும்பத்திடம் பகிர முடியாமல் திணறுவது என ஹை வோல்டேஜ் பரபாமன்ஸ் கொடுத்து கம் பேக் தந்துள்ளார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் . 

அதுமட்டுமல்லாது அவரது கண்களே பாதிக் காட்சிகளில் நடித்து விடுகின்றன என்று தான் கூற வேண்டும். 


ஏனையோரின் நடிப்பு 

அந்தவகையில் வேலைக்கு செல்லும் தன் மனைவிக்கு நல்ல செருப்பு அணிவித்து தயங்கி தயங்கி அன்பை வெளிப்படுத்தும் இஸ்லாமிய கணவராக நடிக்கும் ஜித்தன் ரமேஷ். அப்பாவி கணவராக வலம் வந்தாலும், சந்தேகங்கள் தாண்டி மனைவிக்கு பக்க பலமாக நிற்பது என வெகு நாட்களுக்குப் பிறகு கவனம் ஈர்த்து ஸ்கோர் செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் எண்ட்ரியாக செல்வராகவன்! முதல் பாதி முழுக்க குரலாலேயே நடித்து பார்வையாளர்களை காதலில் விழ வைக்கும் செல்வராகவன் இரண்டாம் பாதியில் செய்வது அதகளத்தின் உச்சமாக உள்ளது. 

நடிகராக செல்வராகவன் மிரட்டி ஸ்கொர் செய்திருக்கும் முதல் படம், நெட்டிசன்களின் ஆதர்ச மீம் கன்டென்ட் பாத்திரமாக இனி ஒரு ரவுண்ட் வருவார். செல்வராகவனின் வசனங்களை இரவல் வாங்கிப் பேசி ஸ்கொர் செய்து, கால் அழைப்பை கண்காணித்து எமோஷனல் ஆகும் இலைஞர் அப்லாஸ் நடிப்பில் அள்ளுகிறார்.  

அதேபோல் கட்டுக்கோப்பான அப்பாவாக  கிட்டு,  ஃப்ரி ஸ்பிரிட் மாடர்ன் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா, தோழிக்கு ஆறுதல் கூறும் அனுமோல் என அனைவரையும் தங்கள் கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர்.


பக்கபலமான திரைக்கதை

இப்படமானது ரசிகர்களை புன்முறுவல் பூக்க வைக்கும் முதல் பாதிக்கு நேர் எதிர் துருவத்தில் சஸ்பென்ஸ் கொட்டி  விறுவிறுப்பாக பயணிக்கிறது இதன் இரண்டாம் பாதி. அதேபோன்று மனுஷ்யபுத்திரன் - சங்கர் தாஸ் - நெல்சன் கூட்டணியில் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதிலும் குறிப்பாக செல்வராகவன் பிக் அப் லைன்களை அள்ளித் தெளிக்கும் முதல் பத்தி வசனங்கள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கின்றன.

அதேபோன்று வேலைக்கு போற படித்த பெண் கர்வமா இருக்கணும் என ஜித்தன் ரமேஷ் பர்ஹானாவிடம் சொல்லும் காட்சி, கட்டுக்கோப்பான தந்தை கிட்டுவுக்கு பக்கத்து கடை பெண் அறிவுரை சொல்லும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. 

அத்தோடு  ஜஸ்டின் பிரபாகரனின் இசை முதல் பாதி கவிதையாகவும், இரண்டாம் பாதி சேஸிங் காட்சிகளுக்கு பலம் சேர்த்து படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

மேலும் முதல் பாதிக்கு நேர் எதிரே பயணிக்கும் இரண்டாம் பாதி இரு வேறு படங்களை பார்க்கும் உணர்வைத் தந்தாலும் விறுவிறுப்பு குறையாமல் இறுதி வரை பயணிக்கிறது. நெற்றி தடம் இருக்கும் 'பாய்', புகை போடும் 'பாய்' என வெகு சில ஸ்டிரியோ டைப் காட்சிகள் இருந்தாலும், தீவிரவாதியாகவோ, வேற்று கிரக வாசி போலவோ இஸ்லாமியரை சித்தரிக்காமல், அவர்கள் வாழ்வியல் பின்னணியில் வெகு நாட்களுக்குப் பின் ஒரு தமிழ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

தொகுப்பு

இஸ்லாமிய பின்னணி என்றாலே சர்ச்சையைக் கிளப்பும் என்ற சூழலிலும்,  வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்ணை சுற்றிய கமர்ஷியல் கதையை முதிர்ச்சியாக கையாண்டு, முத்திரை பதித்திருகின்றார் நெல்சன் வெங்கடேசன்.

Advertisement

Advertisement