• Sep 20 2024

துணிவு பட ரிலீஸின் போது உயிரிழந்த அஜித் ரசிகர்- ரஜினி மன்றத்தினர் செய்த நெகிழ்ச்சியான உதவி!

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. அஜித் - வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக துணிவு படத்தின் FDFS 11ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் இரவு முழுவதும் திரையரங்குகளின் முன்னால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது சென்னை ரோகிணி திரையரங்கு முன்பு நடந்த விபத்தில் அஜித் ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார்.சித்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்ற கண்டெய்னர் லாரியின் மேலேறி ஆடியபடி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பரத்குமார் உயிரிழந்தது குறித்து அவரது நண்பர்களும் குடும்பத்தினர் மிகவும் வேதனை தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், உயிரே போகும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தவறு என பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமார் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில், தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தினர் பலியான பரத்குமாரின் குடும்பத்தினருக்கு உதவி செய்துள்ளனர்.


உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ரமேஷ் கோவிந்தராஜ், ரசிகன் என்ற இனத்தைச் சார்ந்த ஒருவர் தவறிவிட்டார். ரசிகர் என்ற இனம் பெரும் உணர்ச்சிகரமான விஷயம். அஜித்தின் துணிவு படத்தை பார்க்கச் சென்ற ரசிகர் பரத்குமார் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது எனக் கூறினார்.


மேலும், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் செய்து கொடுக்கப்படும் என்றார். தலைவர் ரஜினிகாந்த் நினைத்ததை அவர் எண்ணத்தால் நாங்கள் முன்னின்று நிதி உதவி செய்திருக்கிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தாலும், எங்கள் தலைவர் வழிநின்று மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்துகொண்டே இருப்போம் என ரமேஷ் கோவிந்தராஜ் கூறினார். ரஜினி ரசிகர் மன்றத்தினரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Advertisement

Advertisement