பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ரிச்சா சதா. இவர் 'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்', 'ஃபுக்ரே', 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா', ஷகீலா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் 35 வயது நடிகையான ரிச்சா சத்தா கடந்த 2020-ஆம் ஆண்டு ஷகீலா பயோபிக்கில் நடித்து அசத்தி இருந்தார். இருப்பினும் அதில் ஆடையின்றி ஆபரணங்களால் தனது மேனியை மறைத்தபடி வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் இந்திய ராணுவம் குறித்து போட்ட ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது இவர் ராணுவ கமாண்டர் கூறிய ஒரு விடயத்தை தனது ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். அந்தப் பதிவில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நாங்கள் தயாராக உள்ளோம்.
அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறு மாதிரி இருக்கும்" என மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பதிவிற்கு பாலிவுட் நடிகை ரிச்சா சதா, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுப்பாகி அவர் ராணுவத்தையும் 2020 இல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதித்ததாகக் கூறி அவர் மீது குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து நடிகை ரிச்சா சதாவுக்கு திரையுலகில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் அக்ஷய் குமாரும் "நமது ஆயுதப்படையை இப்படி மோசமாக விமர்சிப்பதை பார்த்து மனம் வேதனைப்படுகிறது" என ரிச்சா சத்தாவின் ட்வீட்டுக்கு கீழ் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் அளவுக்கு பாலிவுட் நடிகைகள் மாறிவிட்டார்களா? எனக் கேட்டு நெட்டிசன்கள் பாலிவுட் சினிமாவைக் கண்டித்து வருகின்றனர்.
Listen News!