தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை இயக்குனராக உருவாக்கி கொண்டவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
ஏராளமான படங்களில் பாடல்களையும் பாடி உள்ள மிஷ்கின், நிறைய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அத்தோடு அவரது இயக்கத்தில் முன்பு நடித்து வந்த மிஷ்கின், தொடர்ந்து தற்போது வேறு இயக்குநரின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் "Leo" என்ற திரைப்படத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்திலும் மிஷ்கின் நடித்து வருகிறார். தனக்கென ஒரு ஸ்டைலில் திரைப்படங்கள் இயக்குவது மூலம் பலரின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார் மிஷ்கின்.
இந்த நிலையில்,நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டிருந்தார். இதில் தனது திரைப்படங்கள் குறித்து நிறைய தகவல்களை மிஷ்கின் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை மிஷ்கின் இயக்கி நடித்திருந்த போது அதில் வரும் காட்சி ஒன்று அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தது. படத்தின் இறுதியில், மிஷ்கின் தனியாக அமர்ந்து கண்ணீருடன் வசனம் பேசும் காட்சி ஒன்று வரும்.
இந்த சிங்கிள் ஷாட்டில் மிஷ்கின் பேசுவதை கேட்டு பலருக்கும் கண்ணீர் வரவும் செய்யும். இதுகுறித்து பேசி இருந்த மிஷ்கின், "அந்த GraveYard சீன் மட்டும் 8 நாள் ஷூட் பண்ணோம். கடைசி நாள்ல தான் என்னோட சீன் எடுத்தோம். ஒரு மூணு நாள் உட்கார்ந்து நான் எழுதின வசனம் தான். ஆனா என்னால மனப்பாடம் பண்ண முடியல. அத்தோடு நான் ஒரே ஒரு டேக்ல ட்ரை பண்றேன் அப்படின்னு சொல்லி பேப்பரை அசிஸ்டன்ட் கையில கொடுத்துட்டு கேமராவ ஆன் பண்ண சொல்லிட்டு, எல்லாரையும் வெளியே போயிடுங்கன்னு சொன்னேன். அந்த அப்பா, அம்மா, பையன், குழந்தை மட்டும் அங்க இருந்தாங்க. எல்லாரும் Graveyard -அ விட்டு போய்ட்டாங்க. கேமராமேன் கேமராவ ஆன் பண்ணிட்டு போய்ட்டாரு.
நிறைய பேர் இந்த கதையை பார்த்துட்டு நான் ரொம்ப நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க. நான் நடிக்கவே இல்ல, நல்லா புரிஞ்சுக்கணும். நான் எழுதுன கதையைத் தான் வேற மாதிரி சொல்ல ஆரம்பிச்சேன். அதை அப்படியே சொல்ல ஆரம்பிச்சு அந்த கதாபாத்திரத்துக்குள்ள டிராவல் பண்ண ஆரம்பிச்சேன.அத்தோடு அங்க புதைக்கப்பட்ட ஆளுங்களோட ஆவிகள் எல்லாம் சேர்ந்து எனக்கு ஹெல்ப் பண்ணுச்சுன்னு நினைக்கிறேன். ஒருவேளை அவங்க எல்லாம் உட்கார்ந்து கதை கேட்டாங்கன்னு நினைக்கிறேன். அந்த மரம், அந்த இரவு, அந்த நிழல் எல்லாம் சேர்ந்து ஒரே டேக்கில் என்ன பண்ண வெச்சது" என அந்த சீன் சிறப்பாக வந்ததற்கான காரணங்களை விளக்கி இருந்தார்.
Listen News!