தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்த சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக சமானதா படங்களில் நடிக்காமல் தொடர்ந்து வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் அவர் நடித்த யசோதா என்கிற திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியானது. அந்த சமயத்தில் கூட சமந்தா உடல் நிலை சரியில்லாமல் தான் இருந்தார். அப்படியான ஒரு சூழ்நிலையிலும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தித்து வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து படிப்படியாக உடல்நலம் தேறி வந்த சமந்தா கடந்த மாதம் முதல் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள தொடங்கி உள்ளார் சமந்தா. அதுமட்டுமல்லாது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்ற படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு, அந்த நிகழ்வில் கண்கலங்கியபடி பேசி இருந்தார்.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' என்ற வரலாற்று கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படமானது வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படாமல் இருந்ததால், இப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
இந்நிலையில் தற்போது சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதன் ரிலீஸ் தேதி சிறிது காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சாகுந்தலம் படத்தை வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி எங்களால் ரிலீஸ் செய்ய முடியாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். உங்களின் தொடர்ச்சியான அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளனர்.
சமந்தா அரியவகை நோயிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளமையால் ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.
Listen News!