ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள பதான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்தப் படத்திற்கு பஜ்ரங்தள் உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.பதான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிசம்பர் 12ம் தேதி வெளியானது. இந்தப் பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் மிக கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற போதிலும், பல தரப்பில் இருந்து கண்டனங்களையும் பெற்றது.
'பேஷ்ரம் ரங்' என்ற அந்தப் பாடலில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்தார். இந்த பிகினி மிகவும் ஆட்சேபனைக்குரியது, மேலும், இது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டுள்ளது. தீபிகாவின் உடையில் இருக்கும் நிறத்தை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கமாட்டோம் என பஜ்ரங்கதள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், மத்தியபிரதேசம், பீஹார் உள்ளிட்ட பகுதிகளில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக தீபிகாவிற்கு காவி பிகினியை அணிவித்தது தவறான செயல் எனவும் கூறினர். தீபிகாவின் பிகினியின் காவி நிறத்தை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும் எனவும், பதான் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்து இருந்தனர். அதன்படி இன்று வெளியான பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகாரின் பகல்பூர் பகுதியில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை அவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
பேஷ்ரம் ரங் பாடல் வெளியானது முதலே பாய்காட் சிக்கலில் தவித்து வந்த பதான் படத்துக்கு இப்போதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் 'பாய்காட் பதான்' என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனாலும் இந்த எதிர்ப்புகளையும் மீறி பல பகுதிகளிலும் பதான் பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகாலை முதலே திரையரங்குகளுக்கு படையெடுத்த ரசிகர்கள், பதான் படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!