தமிழ் சினிமாவிப் பொறுத்தவரையில் சமீப காலமாகவே அடுத்தடுத்து நிகழ்ந்து வரும், பல எதிர்பாராத மரணங்கள் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்த பலரையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அந்தவகையில் கே.விஸ்வநாதன், வாணி ஜெயராம், கஜேந்திரன் ஆகியோரின் மரணத்தை அடுத்து, தற்போது எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர், நடிகையர் படங்களில் பணியாற்றிய பிரபல கலை இயக்குநர் R.ராதா மரணமடைந்துள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாகவும் அதனோடு இணைந்து உடல் நல பிரச்சனைகள் காரணமாகவும் பலவாறு அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று 14.2.2023 விடியற்காலை 3.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
அந்தவகையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் சமீபத்தில் இவரது குடும்பத்தினர் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மேலும் 88 வயதாகும் பழம் பெரும் கலை இயக்குநரான இவருக்கு லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் பல விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்.
அதிலும் குறிப்பாக இவர் பணியாற்றிய எம்.ஜி.ஆர். நடித்த 'ஆனந்த ஜோதி, தெய்வத்தாய், அடிமைப்பெண்', மற்றும் சிவாஜி நடித்த 'கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு', அத்தோடு ஜெயலலிதா முத்துராமன் நடித்த 'சூர்யகாந்தி', கமலஹாசன் நடித்த 'சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன்', ரஜினிகாந்த் நடித்த 'பில்லா, சிவப்புச்சூரியன், நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன்' போன்ற பல படங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது.
இந்நிலையில் இவரின் மரணம் தற்போது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் உடல் அஞ்சலிக்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இவரின், வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை இறுதிச்சடங்குகள் நூங்கம்பாக்கம் சுடுகாட்டில் நடைபெற உள்ளதாக, குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!