சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதன் பின்னர் ஈசன், பசங்க, நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். முதல் படமான சுப்ரமணியபுரத்தில் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்டாகின. எனினும் குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலும், காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை பாடலும் படம் வெளியானபோது அனைவராலும் முணுமுணுக்கப்பட்டது.
ஜேம்ஸ் வசந்தன் இப்போது அனைவராலும் அறியப்படும் இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ஒரு தொகுப்பாளராக. சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அவை அனைத்தும் மக்களிடம் வரவேற்பையே பெற்றன.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் பதிவிடும் பதிவுகள் விவாதத்தை கிளப்புபவை. எனினும் குறிப்பாக இளையராஜா குறித்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பேசப்படும். சமீபத்தில்கூட இளையராஜா இசையில் வெளிவந்த என்னுள்ளே என்னுள்ளே பாடலில் குறை சொல்லியிருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் இளையராஜாவை விமர்சித்துவந்த ஜேம்ஸ் வசந்தன் தற்போது அனிருத்தை விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இமான் சிறந்த இசையமைப்பாளர்தான். அவருடைய பலமே மெலோடி இசையை கொடுப்பதுதான். ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் தன்னுடைய இசையால் கொடுக்கிறார். ஆனால் அனிருத் அப்படி இல்லை.
அவருடைய இசை முழுவதும் அதிரடி, ராக் இசையாக இருக்கிறது. அத்தோடு வேறு வகையான இசைகளில் அவர் அதிக கவனம் செலுத்துவதில்லை. அவருடைய நோக்கமே ரசிகர்களை கவர்வதாகத்தான் இருக்கிறது. குத்து பாடல்கள் போன்ற பாடல்களைத்தான் தொடர்ந்து தருகிறார். இதை வைத்து எத்தனை நாட்கள் ஓட்ட முடியும். பிரியாணியை ஒருநாள் சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும். தொடர்ந்து அதை சாப்பிட்டால் எப்படி இருக்கும்?
ரசிகர்கள் ராக் இசையை விரும்புவதால் அனிருத் அதை கொடுக்கிறார் என்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தலை சாய்ப்பதால்தான் அவருக்கு வேறு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கு எது வருகிறதோ அதை மட்டுமே வெளிக்காட்டுகிறார்.
ஆனால், இசையமைப்பாளர்களுக்கு இது அழகு அல்ல. இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவையோ,அதைத்தான் இசையமைத்து கொடுக்க வேண்டும். அத்தோடு ராக் இசை மட்டும் படத்தின் சிறந்த இசை என்று சொல்லிவிட முடியாது. அந்தப் படத்திற்கு தேவையான மெலோடி, குத்து பாட்டு, பிஜிஎம் என பல ரகங்கள் இருக்க வேண்டும்" என்றார். அனிருத் இப்போது லியோ, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!