ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க வாரிசு, துணிவு ஆகிய இருபடங்களுமே இன்றைய தினம் அதிகாலை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் இப்படங்கள் வெற்றியடைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் பதிவிட்ட பதிவில் வாது" படம் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அப்படி ஒரு படம் வரவில்லையே என்று யோசிக்கிறீர்களா? இன்னுமாங்க புரியலை.. நான் சொல்வது வாரிசின் முதல் எழுத்தும், துணிவின் முதல் எழுத்தும் சேர்த்துதான்..! இரு கதாநாயகர்களுக்கும் ஆத்மார்த்தமான ரசிகர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்காக எதையும் செய்ய துணிவும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியும், திரைப்படத்தின் பின்னால் இயங்கிய தொழிலாளர்களின் மகிழ்ச்சியும் தான் எப்போதும் முக்கியம். இரு படங்களின் வெற்றி, தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக அமையவும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையவும் எனது இதயமார்ந்த வாழ்த்துக்கள்.துணிவுதான் வெற்றியைத் தரும் இல்லை இல்லை வாரிசுதான் வெற்றியைக் கொடுக்கும் என்று மக்கள் வாதிட்டு கொண்டிருக்கிறார்கள். அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அரசியலுக்கும், படத்திற்கும் சம்மந்தம் இருக்குமோ? என்று மனம் சந்தேகப்பட்ட போது, அப்படியெல்லாம் கிடையாதுப்பா..! அரசியலையும், திரைப்படத்தையும் ஏன் முடிச்சுப் போடப் பார்க்கிறாய் என்று என் மனசாட்சி உண்மையை உள்ளுக்குள் சொல்லிக் கொண்டது. படத்தின் தலைப்பே சில நேரங்களில் படங்களுக்கு பெரிய விளம்பரமாக அமைந்து விடுகிறது அல்லவா..!
அஜித் அவர்களை அதிமுக-விற்கு அழைத்து வர நீங்கள் முயற்சி செய்யக்கூடாதா? என்று என்னிடம் கேட்ட நிர்வாகிகளும் உண்டு. சிலர் தொடர்ந்து அஜித் அவர்களோடு பேசும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அஜித் அவர்களுக்கு இதில் ஆசை இல்லை என்பதுதான் எனக்கு வந்த தகவல். அம்மா அவர்கள் மீது அஜித் வைத்திருந்த மரியாதையைப் பார்த்த சிலருக்கு அவர் மீது காதல் வரத்தானே செய்யும்..!
மறுபக்கம் விஜய் அவர்கள் அரசியலில் வருவதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் முழுதாக அவர் இன்னும் அரசியலில் இறங்கவில்லை. வருவார் என்பது உண்மை. அவர் எப்போது வருவார் என்பதுதான் தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறுவதை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறாரோ..!
கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் தொடர்ந்து தமிழக அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் பெரும்பாலான மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது. எது எப்படியோ..! இன்றிருக்கும் சூழ்நிலையில், அரசியல் அரங்கில் முதலில் கால்பதிப்பவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அடடா .! நான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போயிட்டேன். திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.. என்று நான் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்த எனது மனைவி, இதெல்லாம் உங்களுக்கு தேவையா? போய் உங்க வேலையப் பாருங்க..! முடிஞ்சா, அவங்ககிட்ட சொல்லி எங்களுக்கு நாலு டிக்கெட் வாங்கிக் கொடுங்க.. என்றாரே பார்க்கலாம்..! என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.
Listen News!