சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இறந்து போன பிறகும்கூட அவரது வாழ்க்கை வரலாற்றில் நடித்து தேசிய விருது பெறும் அளவுக்கு சில்க்கின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.
இவர் உச்சத்தில் இருக்கும்போது சில்க் ஸ்மிதாவின் நடனத்திற்காகவே பல படங்கள் ஓடிய வரலாறு உண்டு. எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சி காட்டினாரோ அதே அளவு தனது நடிப்பிலும் அனைவரையும் வாய் பிளக்க வைத்தவர். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை பார்த்தவர்கள், கவர்ச்சி நடிகை சில்க்தான் அவர் என நம்ப மறுப்பார்கள். அந்த அளவுக்கு அதில் அவரது நடிப்பு இருக்கும்.
இயக்குநர் மணிவண்ணனின் ஒரு திரைப்படத்தில் மனோபாலாவுக்கும், காந்திமதிக்கும் மகளாக நடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. அதில் அவர்கள் கலைக்கூத்தாடி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார்கள். அந்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் சின்ன சின்ன தோசைக்கல், சட்டி ஆகியவை விற்கப்பட்டுக்கொண்டிருந்ததாம். அங்கு சென்ற சில்க் தோசைக்கல் உள்ளிட்டவைகளை வாங்கினாராம். இதை ஏன் மா வாங்குற என மனோபாலா கேட்டாலும் சில்க் பதில் சொல்லவில்லையாம். மறுநாள் அந்த தோசைக் கல்லை தோடாகவும், சின்ன சட்டிகளை இணைத்து பெல்ட்டாகவும் மாற்றி அணிந்துவந்தாராம் சில்க். அந்த அளவுக்கு அவர் க்ரியேட்டிவிட்டி குணமுடையவர்.
அதேபோல், பாடல் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு பாடலின் வரிகளை கூர்ந்து கவனித்தாலும், டேக்கில் அவர் முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடி மற்றவைகளுக்கு வாய் அசைக்க மறுத்துவிட்டு நடனத்தின் அசைவுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவாராம். அப்படி ஒருமுறை மனோபாலா சென்று எதற்காக இப்படி பாடாமல் கைகளை மேலேயும், கீழையும் கையை அசைத்து நடனம் மட்டும் ஆடுகிறாயே என கேட்டாராம். அதற்கு பதிலளித்த சில்க், "சார் அவங்க எல்லாம் மூஞ்சியவா சார் பார்க்குறாங்க. என் முகத்தை எல்லாம் பார்க்க மாட்டாங்க சார்" என அசால்ட்ட்டாக கூறினாராம். சில்க் கூறியதும் ஒருவகையில் உண்மைதான் அவரை வெகு சிலரைத் தவிர உயிராகவோ, சிறந்த நடிகையாகவோ யாரும் பார்க்கவில்லை. கவர்ச்சி பொருளாகத்தான் பார்த்தார்கள்.
ஒருமுறை சில்க் ஸ்மிதாவிடம் சென்ற மனோபாலா, என்னம்மா உன்னைப் பற்றி தப்பு தப்பா செய்தி வருது. நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றாராம். உடனே சில்க் ஸ்மிதா நீண்ட நேரம் கதறி கதறி அழுதாராம். ஏன் அழுகுற எதுவா இருந்தாலும் சொல்லு என மனோபாலா கூற; ஒன்னும் இல்ல சார் என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் மனோபாலாவின் முகத்தை உற்றுப்பார்த்துவிட்டு, 'வரேன் சார்' என்று கூறிவிட்டு சென்றாராம். அப்படி சென்றதற்கு மறுநாள் தூக்கு போட்டு உயிரிழந்துவிட்டார் சில்க். இந்தத் தகவலை மனோபாலா அவரது யூட்யூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.
Listen News!