பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அந்த கொலை மிரட்டலை விடுத்தது ஒரு மாணவன் என கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் வீட்டில் விலை உயர்ந்த வைர கம்மல்களை வீட்டில் வேலை செய்து வந்த நபர் திருடியதாக கடந்த மே 16ம் தேதி போலீஸ் நிலையத்தில் அர்பிதா கான் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர்.
அர்பிதா கானின் புகாரை விசாரித்த போலீஸார் குற்றவாளியை உடனடியாக கைது செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சல்மான் கான் தங்கை வீட்டில் திருட்டு: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கான் மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்த வேலைக்காரர் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து வெளியேறுவது குறித்து யாரிடமும் சொல்லாமல் சென்றிருக்கிறார்.டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள டிராவில் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைர கம்மல் காணாமல் போனதை அறிந்த அர்பிதா உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.
5 லட்சம் மதிப்புள்ள வைர நகை: அர்பிதா கான் வீட்டில் சுமார் 11 பணியாட்கள் உள்ளனர். அதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக வேலைக்கு சேர்ந்த சந்திப் ஹெக்டே எனும் 30 வயதான நபர் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சம்பவம் நடந்த அன்று சீக்கிரமே கிளம்பிச் சென்றிருக்கிறார்.இதுகுறித்து கர் நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் அர்பிதா கான் தகவல் அளித்த நிலையில், கிழக்கு வில்லே பார்லே பகுதியில் உள்ள ஸ்லம் ஏரியாவில் வசித்து வந்த அந்த வேலைக்காரர் வீட்டுக்குச் சென்று விசாரித்ததில் 5 லட்சம் மதிப்புள்ள வைரக் கம்மல் அவரிடம் இருந்ததை பார்த்து போலீஸார் அதை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.
அதிக சம்பளம் கொடுத்தும்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கார பெண் பல கோடி ரூபாய் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல பிரபலங்கள் வீட்டில் பணியாட்கள் இதுபோன்ற திருட்டுத் தொழிலில் ஈடுபடுவது பிரபலங்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்தாலும், இப்படி திருடுவது தவறு என்பதை வேலையாட்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு பிரபலங்களின் வீடுகளில் வேலை செய்யும் பலர் நம்பிக்கைக்கு பாத்திரமாக வேலை செய்து வரும் நிலையில், சிலர் செய்யும் திருட்டுக்கள் மற்றவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.
Listen News!