தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவருடைய தம்பியும் பிரபல நடிகருமானவர் பாலா. இவர் தமிழில் 'அன்பு' படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் பாலாவிற்கு கடந்த சில மாதங்களாக கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு உடல்நலப் பாதிப்பு உருவானது. இதனையடுத்து சமீபத்தில் பாலாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பாலா அளித்திருக்கும் பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "நான் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவு என மருத்துவர்கள் கை விரித்துவிட்டார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் பாலா பிழைப்பார் என்று சொல்ல முடியாது என என் அண்ணன் சிவா, சகோதரியிடம் மருத்துவர் கூறியிருக்கிறார். அதை கேட்டு அவர்கள் இருவரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.
இதன் பின்னர் அண்ணா டாக்டர்களிடம் என்ன டாக்டர் இப்படி சொல்கிறீர்கள். இதுவே உங்களின் சகோதரராக இருந்தால் என்ன செய்வீர்கள் என டாக்டரிடம் கேட்டிருக்கிறார். அவர் என் சகோதரராக இருந்தால் நிம்மதியாக அவரை சாகவிடுவேன் என டாக்டர் கூறியிருக்கிறார்.
டாக்டர் இவ்வாறு கூறியதை கேட்டு என் சகோதரியும், அண்ணாவும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். இனி நான் பிழைக்க மாட்டேன் என டாக்டர் சொன்னதை அடுத்து அறிக்கை வெளியிடக் கூட அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் டாக்டர் கை விரித்த சில மணிநேரத்தில் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தான் எனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவு செய்தார்கள். அந்த அறுவை சிகிச்சையும் நல்லபடியாக முடிந்தது. அதன் பிறகு நான் உடல்நலம் தேறி பழைய பாலாவாக உங்கள் கண் முன்பு வந்து நிற்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்கள் மட்டும் அல்லாமல் என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தவர்களும் வந்து பார்த்து சென்றது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது" என மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார் பாலா.
Listen News!