16 வயதினிலே திரைப்படத்துக்கு தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தவர் தான் பாரதி ராஜா. அவரது மேக்கிங்கும், வசனங்களும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக முதல் மரியாதை படத்தில் அவரது காட்சியமைப்பும், சிவாஜியிடமிருந்து வாங்கியிருந்த அலட்டல் இல்லாத நடிப்பும் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது.
பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார்.
இயக்குநர் பாரதிராஜா, ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி என பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் அனைவரும் வெறும் அழகை மட்டும் கொண்டிருக்காமல் தங்களது திறமையின் துணையோடு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகைகளாக வலம் வந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா ஹீரோயின்களை தனது படத்துக்கு எப்படி தேர்ந்தெடுப்பார் என்ற தகவல் வெளியாகியிருகிறது. அதாவது மண்வாசனை படத்தின் மூலம்தான் ரேவதி ஹீரோயினாக அறிமுகமானார். அதில் கதாநாயகனாக நடித்த பாண்டியனும் அறிமுக நடிகர். மதுரையில் ஒரு வீதியில் பாண்டியனை பாரதிராஜா கண்டுபிடித்தார் என்ற தகவல் உலாவுவது வழக்கம்.
அதேபோல் மண்வாசனை படம் ஆரம்பித்த சமயத்தில் ரேவதி 11ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாராம். அப்போது ஒருநாள் பள்ளியை முடித்து ரேவதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அப்பக்கம் காரில் வந்த பாரதிராஜா ரேவதியை பார்த்திருக்கிறார். பிறகு அவரது வீட்டுக்கு சென்று உங்கள் மகள் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
அதன் பிறகுதான் ரேவதி நடிப்பதற்கு ஒத்துக்கொண்டாராம். இதனை ரேவதி ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதேபோல்தான் லண்டனில் படிப்பை முடித்து வந்த ராதிகா தனது வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக சென்ற பாரதிராஜா ராதிகாவை பார்த்து உடனே அவரது தாயிடம் சென்று கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா நடிக்க வேண்டும் என கேட்டு நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!