ஒரு காலத்தில் நம்ம இளைஞர்கள் பலரதும் கனவுக் கன்னி என்றால் அது நம்ம பாவனா தான். இவரின் நடிப்பினையும் தாண்டி சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். இவர் குறிப்பாக தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அந்தவகையில் இவர் தமிழ்த் திரையுலகில் 'சித்திரம் பேசுதடி' என்ற திரைப்படத்தின் மூலமாகவே அறிமுகமானவர். பின்னர் 'வெயில்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாரட்டுக்கள் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தமிழில் 'தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல்' உட்படப் பல திரைப்படங்களில் அசத்தியிருக்கின்றார். இவர் நடித்த பல வெற்றிப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. அத்தோடு இவர் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த இவர் தமிழில் கடைசியாக அஜித்குமாரின் 'அசல்' படத்தில் நடித்து இருந்தார். இந்த படமானது 2010 இல் தான் வெளியானது. அதன் பிறகு பாவனா தமிழில் படங்களில் நடிக்கவில்லை.
இருப்பினும் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாவனா. அந்தவகையில் இந்த படத்தில் நாயகனாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். மேலும் ஜெய்தேவ் டைரக்டு செய்கிறார். அத்தோடு கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
அதுமட்டுமல்லாது இப்படமானது 'பேய் திரில்லர்' கதையம்சத்தில் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் பாவனா, கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து படத்தின் நாயகன் கணேஷ் வெங்கட்ராமன் சமீபத்தில் கூறும்போது, "திறமையான நடிகை பாவனா 'அசல்' படத்துக்கு பிறகு தற்போது தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிப்பது சிறந்த அனுபவம். இந்த படம் 'ஹாரார் திரில்லர்' கதையம்சத்தில் தயாராகிறது. விஜய்யின் 'வாரிசு' படத்தில் முதல் தடவையாக நான் நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு வெகுவாக பாராட்டுகள் கிடைத்தன. தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன" எனத் தெரிவித்து இருக்கின்றார்.
Listen News!