தெலுங்கு சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சரத்பாபு. அந்தப் படத்தில் அவரது நடிப்பு திறமையை பார்த்த தமிழ் திரையுலகம் அவரை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து பல பட வாய்ப்புகளை கொடுத்தது. அப்படி அவர் நடித்த படங்களில் தனது திறமையை காண்பித்து அலட்டிக்கொள்ளாமல் நடித்தார்.
ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், நெற்றிக்கண், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்து அவரது குட் புக்கில் இடம்பெற்றவர் சரத்பாபு. அவரை ரஜினிகாந்த்தே சில படங்களில் சிபாரிசு செய்தார்.குறிப்பாக 90களில் ரஜினியுடன் சரத்பாபு நடித்ட முத்து, அண்ணாமலை ஆகிய படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக திகழ்கிறது.
ரஜினிகாந்த் மட்டுமின்றி கமல் ஹாசனுடனும் சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இரு பெரும் ஹீரோக்களுடனும் நடித்து நல்ல நட்பை அவர்களுடன் வளர்த்திருந்தாலும் தன்னுடைய வாய்ப்புக்காக அவர்களை தொந்தரவு செய்யாதவர், ஈகோ பார்க்காதவர் என நல்ல பெயரையும் சரத்பாபு பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி ரொம்பவே சிம்ப்பிளானவர் என்றும் பலரால் புகழப்படுபவர்.
வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார்.
சரத்பாபுவிற்கு செப்சிஸ் எனும் செப்டிசீமியா நோய் பாதிப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக, உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார். ஹைதரபாத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் சரத்பாபுவின் உடலுக்கு தி.நகரில் வைத்து இறுதிச்சடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
Listen News!