அதிகளவிலான தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆரூர்தாஸ். இவர் எழுதிய கதைகளில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் தான் அதிகம். அந்தவகையில் மொத்தமாக சேர்த்து 500 இற்கு அதிகமான திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
இவரின் சொந்த ஊராக திருவாரூர் காணப்படுகின்றது. அங்கிருந்து தஞ்சை இராமையாதாசிடம் வந்து சேர்ந்து, அவரிடமிருந்து கதை உரையாடல் கலையைக் கற்றுக் கைதேர்ந்த ஒருவராக மாறினார். மேலும் இவர் தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாசில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக்கொண்டார்.
படித்த பெண் (1956) என்ற படத்தில் என். எல். கானசரஸ்வதி பாடிய ‘வாழ்வில் காணேனே இன்பம்’ என்ற பாடலையும் இவர் தான் பிரமிக்கத்தக்க வகையில் எழுதியுள்ளார். இப்பாடலை இன்றும் பலராலும் மறக்க முடியாது. அதுமட்டுமல்லாது வடிவேலுவின் 'தெனாலிராமன்' படத்திற்கும் இவர் தான் கதை எழுதியிருந்தார்.
இவ்வாறாக திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த இவர் நேற்றைய தினம் முதுமை காரணமாக அவருடைய இல்லத்தில் காலமானார். இவரின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.
இவரைத் தொடர்ந்து ஆரூர்தாஸின் சிஷ்யனும், பிரபல நடிகருமான பாஸ்கர் இரங்கல் தெரிவித்திருக்கின்றார். அதாவது "தமிழைத் தடையின்றி, பிழையறப் பேச இந்த எளியவனுக்குப் படிப்பித்த என் ஆசான் விண்ணுலகம் சென்றாரோ, டேய் பாஸ்கரா என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் நான் கேட்பேன்" என்று கண்ணீர் மல்க தனது இரங்கலைத் தெரிவித்திருக்கின்றார்.
Listen News!