தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகரும் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்தார்.இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே கமல் ரஜினி சூர்யா ஆகியோர் தமது டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக தமது இரங்கலைத் தெரிவித்ததை அடுத்து நடிகர் விஜயகாந்த் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஜயகாந்த் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, "தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும் பழம்பெரும் நடிகரும் , நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான திரு. கிருஷ்ணா அவர்கள், இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமுற்றேன். திரு கிருஷ்ணா அவர்கள் என் மீது அளவற்ற அன்பும் நட்பும் செலுத்தியவர்.
350 படங்களுக்கு மேல் நடித்துள்ள, திரு. கிருஷ்ணா அவர்கள் நல்ல மனிதர் மற்றும் மிகச்சிறந்த நடிகர். அவரது இழப்பு திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் திரு. மகேஷ் பாபு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து டி.ராஜேந்தர் கூறியுள்ளதாவது... " மனிதநேயத்தின் மறுஉருவம், எளிமையின் இருப்பிடம், திறமையின் பிறப்பிடம்... தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப்பறந்த மாபெரும் நடிகர் கிருஷ்ணா அவர்களுடைய மறைவு என் மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இப்படிக்கு டி ராஜேந்தர், என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!