தமிழ் சினிமாவில் முன்னணி வகிக்கும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாது இவர் பின்னணிப் பாடகராகவும் திகழ்ந்து வரும் ஒருவர். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. மேலும் இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகிறது.
இப்படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியதோடு, இப்படத்தில் உணவு டெலிவரி செய்யும் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கின்றார். மேலும் தமிழில் ‘நானே வருவேன், கேப்டன் மில்லர், வடசென்னை 2’ போன்ற படங்களும், தெலுங்கில் 'வாத்தி' என்ற படமும் இவரின் கைவசம் தற்போது இருக்கின்றன. அதுமட்டுமல்லாது ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'தி கிரே மேன்' என்ற படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க தனுஷ் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற தனுஷ் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தனுஷுக்கு 'பியார் பிரேமா காதல்' படத்தின் இயக்குநர் இளன் ஒரு காதல் கதையை கூறி உள்ளார். இந்த கதை தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த முழுநீள காதல் படம் என்றால் அது '3' தான். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அப்படத்தில் காதல் நாயகனாக வலம் வந்தார் தனுஷ். அப்படத்துக்கு பின்னர் எந்தவொரு முழு நீள காதல் படங்களில் நடிக்காமல் இருந்த வந்த தனுஷ் தற்போது மீண்டும் காதல் ரூட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இந்தநிலையில் தனுஷ் - இளன் இணையும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது காதல் கதையினை மையமாக கொண்டு இப்படம் அமைய இருப்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!