• Sep 20 2024

நண்பரின் கடைசி ஆசையை அலட்சியம் செய்தாரா இளையராஜா? - உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன். பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை பாடி வெகுவாக  பிரபலமடைந்தார். அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் தனித்துவமாக இருந்ததால் அவர் இளையராஜாவின் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடி ராஜாவின் கோட்டையில் தவிர்க்க முடியாத தளபதியாக விளங்கினார்.

16 வயதினிலே படத்தில் ஆரம்பித்த இளையராஜா - மலேசியா வாசுதேவன் கூட்டணி அதன் பிறகு தொடர்ந்து ரசிகர்களின் காதுகளுக்கு தொடர்ந்து விருந்து படைத்தது.

இளையராஜாவுடன் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன். மொத்தம் 8000 பாடல்கள்வரை பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன் விஜய் நடித்த பூவே உனக்காக, பத்ரி உள்ளிட்ட படங்களிலும் நடித்து நடிகராகவும் முத்திரை பதித்தார். இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு பலே பாண்டியா படத்தில் பாடல் பாடினார். பிறகு 2011ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

இந்நிலையில் மலேசியா வாசுதேவனின் இறுதி நிமிடங்கள் குறித்து அவரது மகனும், பாடகருமான யுகேந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "அப்பா ஒரு வாரம் ஐசியூவில் இருந்தார். அவர் இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார். அந்த ஒரு வாரத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா வந்து எனது அப்பாவை பார்ததுவிட்டு சென்றார். அப்போது எனது அம்மாவும் ஜீவா ஆண்ட்டியிடம் இளையராஜா வந்து பார்த்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்.

ஆனால் அந்த ஒருவாரத்தில் இளையராஜா வரவே இல்லை. ஒருகட்டத்தில் அப்பாவின் உடல்நிலை மோசமாகி இனி ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். நிலைமையை உணர்ந்துகொண்ட நாங்கள் கொஞ்ச நேரம் அப்பாவுடன் நேரத்தை செலவிடலாம் என முடிவெடுத்தோம்.

அப்போதுதான் இளையராஜா வந்தார். சரியாக அந்த நேரத்தில் அப்பா இறந்துவிட்டார். அந்த நேரத்தில் இளையராஜாவிடம் நான், 'உங்களுக்காகத்தான் காத்திருந்தார். இப்போதான் வர முடிந்ததா. உயிர் போயிடுச்சு போங்க' என்றேன்.

அது கோபம் இல்லை. ஆதங்கம். ஆனால் அதற்கு பிறகு அப்பாவின் இறுதிச்சடங்கு முடியும்வரை கூடவே இளையராஜா இருந்தார். அவர் பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் போகமாட்டார். அதன் பிறகு என்னிடம் நீ ஏன் சிங்கப்பூர்லாம் போற இங்கேயே இரு நாங்கள் எல்லாம் இல்லையா என உரிமையாக என்னிடம் கேட்டார்" என யுகேந்திரன் பேசினார்.

யுகேந்திரனின் இந்தப் பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, மலேசியா வாசுதேவனை இளையராஜா நினைத்திருந்தால் போய் பார்த்திருக்கலாம். அவர் தனது ஆஸ்தான நண்பர், பாடகரின் கடைசி ஆசையை அலட்சியம் செய்திருக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கமெண்ட்ஸ்ட் செய்துவருகின்றனர். முன்னதாக, மனோபாலாவுக்கு இளையராஜா தெரிவித்த இரங்கலும் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement