தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் இருந்தவர் மனோபாலா. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் 20க்கும் மேற்பட்ட இயக்கியிருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக புதிய வார்ப்புகள் படத்தில் இணைந்ததன் மூலம் சினிமாவுக்குள் அவர் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாக்கள் மட்டுமின்றி சீரியல்களையும் அவர் இயக்கியிருக்கிறார்.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையொட்டி அவருக்கு சென்னை அப்போலோவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாள்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவந்தார் மனோபாலா. எப்படியும் உடல்நலம் தேறிவிடுவார் என்று அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால் இன்று அவர் எல்.வி.பிரசாத் ரோட்டில் இருக்கும் அவருடைய வீட்டில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் இருக்கும் மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருமே அவர் எளிதில் அணுகும் இடத்தில் இருந்தார். பலருக்கு பல உதவிகளை விளம்பரம் இல்லாமல் செய்தவர் என கூறிவருகின்றனர். அந்தவகையில் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கிய எழிலுக்கு மனோபாலா செய்த உதவி தெரியவந்திருக்கிறது.
எழிலுக்கு பக்கத்து ஊர்க்காரர்தான் மனோபாலாவாம். எழில் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே நட்பு கிடைத்தாம். அடிக்கடி மனோபாலாவே அவரது காரை எடுத்துக்கொண்டு எழில் வீட்டுக்கு வந்து எங்கேயாவது அழைத்து சென்று மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி எந்த வாய்ப்பு வந்தாலும் மிஸ் பண்ணாம சரினு சொல் என அட்வைஸும் செய்திருக்கிறார்.
மனோபாலா சமீபத்தில்தான் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே புதிய அலுவலகம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அங்கு ஒருமுறை எழிலை அழைத்தவர், ஜன்னலை திறந்து, இங்கிருந்து பார்த்தா கோயம்பேடே தெரியுதுடா. நீ இங்க இருந்தே சீன்களை, கதைகளை எழுதலாம் என குதூகலிப்போடு கூறியிருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு மணிரத்னத்திடம் எழிலை பேசவும் வைத்திருக்கிறார்.
எழில் முன்னணி இயக்குநராக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் எழிலின் வீட்டுக்கு சென்ற மனோபாலா ஒரு சீரியலில் வங்கி மேலாளர் கேரக்டர் இருப்பதாக கூறிவிட்டு மிகப்பெரிய தொகையை எழிலின் பாக்கெட்டில் திணித்துவிட்டு சென்றுவிட்டாராம். அது எழிலுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்ததாம். இதனை இயக்குநர் எழில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
Listen News!