பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முதல் பாகத்தை பீட் செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் ப்யூர் மெலடியாக உருவாகியிருந்த அந்தப் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருந்தார். இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.
இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரையும், இசையையும் வெளியிடுகிறார். இவர் ஏற்கனவே முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி முதல் பாகத்தின் ஆரம்பத்தில் குரலும் கொடுத்திருந்தார். முதல் பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்தும் கமல் ஹாசனுடன் கலந்துகொண்டிருந்தார் .
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன் என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கிறது. அவர் அழைக்கப்படாததற்கு காரணம் என்ன என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது முதல் பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் என இருவருக்குமே அழைப்பு சென்றது. அதில், இரண்டு பேரின் பெயர்களை போடும்போது கமல் ஹாசன் பெயரை முதலில் போட்டதாகவும், இரண்டாவதாக ரஜினியின் பெயரை போட்டதாகவும்; அதற்கு ரஜினி தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததால் ரஜினியின் பெயர் முதலில் போடப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.
இந்தச் சம்பவம் மணிரத்னத்துக்கு பெரும் அப்செட்டை தந்தது. எனவே இரண்டாம் பாக ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைக்கும்போதும் இதேபோன்ற குடைச்சல் எழுந்தால் என்ன செய்வதென்று யோசித்த மணிரத்னம் கமல் ஹாசனை மட்டும் அழைக்க முடிவு செய்துவிட்டார் என்ற தகவல் ஒன்று கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக உலாவி வருகிறது.
அதேசமயம் இந்தத் தகவல் வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்டது. ரஜினிகாந்த் லைகாவின் தயாரிப்பில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க லைகா நிறுவனம் தயாரிக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் விழாவிற்கு ரஜினிக்கு எப்படி அழைப்பு செல்லாமல் இருந்திருக்கும். அவருக்கு நிச்சயம் அழைப்பு சென்றிருக்கும். ஆனால் அவர் ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் வர முடியாத சூழல் உருவாகியிருக்கும் என ஒரு தரப்பினர் பேசிவருகின்றனர்.
Listen News!