பிரபல இயக்குநர் லிங்குசாமி பிவிபி என்ற நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடியே 35 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனுக்கான தொகையை தன்னுடைய காசோலை மூலம் லிங்குசாமி திரும்பி கொடுத்த நிலையில், அந்தக் காசோலை வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்துவிட்டது. பின்னர் இது குறித்து லிங்குசாமி தரப்பிற்கு பிவிபி நிறுவனம் பலமுறை கூறியும், எவ்வித பதிலும் கூறப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனையை சட்டரீதியாக கொண்டு செல்லும் விதமாக பிவிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. பின்னர் இது குறித்து லிங்குசாமி தரப்பில் இருந்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்ததாக உத்தரவு பிறப்பித்தது.
இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்ப ஏற்படுத்திய நிலையில், தற்போது லிங்குசாமி தானாக முன்வந்து அறிக்கை வெளியிட்டு, 6 மாத சிறை குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
"இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் மீடியா இடையில் ஆனது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்".
Listen News!