• Nov 10 2024

விவேகானந்தாவிற்கும் நித்தியானந்தாவிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?- சாமர்த்தியமாக பதில் கூறிய திண்டுக்கல் லியோனி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய காமெடி நடிகனாக வலம் வருபவர் தான் யோகிபாபு. இவர் காமெடியனாக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் கலக்கி வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பன்னிக்குட்டி .

இத்திரைப்படத்தை இயக்குநரான அனுசரண் இயக்குவதோடு யோகிபாபுவுடன் கருணாகரன், ராமர், தங்கதுரை, திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் ஜுலை மாதம் 8ம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய திண்டுக்கல் லியோனி, “பன்னிக்குட்டி படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம், தற்போது ரிலீஸாக இருக்கிறது. 21 வருஷத்திற்கு முன்பாக கங்கா கௌரி என்ற படத்தில் நடித்தேன். அதன் பிறகு எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தது. சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மாமனாராக நடிக்கக்கூட வாய்ப்பு வந்தது. அப்போது பள்ளியில் நான் ஆசிரியராக இருந்த காரணத்தால் என்னால் நடிக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய அனுசரணுக்கு நன்றி.

இயக்குநர் என்னிடம் கதை சொல்லவந்தபோது ஒரு சாமியார் கேரக்டரை சொல்லி உங்களுக்காகவே இந்தக் கேரக்டரை டிசைன் பண்ணேன் என்று சொன்னார். சாமியார்களைப் பற்றி பட்டிமன்றங்களில் நான் நிறைய பேசியிருக்கிறேன். ஒருமுறை பட்டிமன்ற மேடையில் வைத்து விவேகானந்தாவிற்கும் நித்தியானந்தாவிற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பேச்சாளர் என்னிடம் கேட்டார். அந்தக் கேள்விக்கு ஒரு நடுவராக நான் எப்படி பதில் சொல்ல முடியும். விவேகானந்தர் மிகப்பெரிய லெஜண்ட். நித்தியானந்தா எப்படி என்று உங்களுக்கே தெரியும். இந்தக் கேள்விக்கு நான் எப்படி பதில் சொன்னாலும் மாட்டிக்கொள்வேன்.

பின்னர் யோசித்து விவேகானந்தர் தன்னுடைய சீடர்களால் பிரபலமானார். நித்தியானந்தா சீ.டிக்களால் பிரபலமானார் என்று சொன்னேன். அங்கிருந்த அனைவருமே கைத்தட்டி சிரித்தனர். இதுபோல சாமியார்களில் பல வகைகள் உள்ளன. இந்தப் படத்தில் வித்தியாசமான சாமியார் கேரக்டரை இயக்குநர் எனக்கு கொடுத்துள்ளார். படத்தில் ராமர், தங்கதுரை, கருணாகரன் சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தில் நான் நடித்தபோது பள்ளி ஆசிரியராகவும், திமுகவின் பேச்சாளராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்தேன். ஆனால், படம் ரிலீஸாகும்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக அரசாங்கப் பொறுப்பில் இருக்கிறேன். படத்தில் என் பெயர் போடும்போது அதை சேர்த்து போடுங்கள். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரே சினிமாவை மதித்து நடித்திருக்கிறார் என்று நினைத்து சினிமா என்ற தொழில் மீது மக்களுக்கு இன்னும் மரியாதை கூடும்” எனத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement