விக்ரம் நடிப்பில் கடந்தாண்டு மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. இதில், பொன்னியின் செல்வன் மட்டுமே ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் இறுதியில் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்த இரண்டு பாகங்களிலும் விக்ரம் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
அதேநேரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்ததுமே பா ரஞ்சித்தின் தங்கலான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விக்ரம். முதன்முறையாக பா ரஞ்சித்துடன் இணைந்துள்ள விக்ரம், தங்கலான் படத்திற்காக ஆளே மாறிவிட்டார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் உட்பட பல சர்வதேச விருதுகளுக்கு கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.
அந்தளவிற்கு நெருப்பாக உருவாகி வருகிறதாம் தங்கலான் திரைப்படம். இதனிடையே தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்க விக்ரமிற்கு அழைப்பு சென்றுள்ளது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்காக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் ரெடியாக இருந்ததாம். ஆனால், இந்த ஆஃபரை விக்ரம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதற்கான காரணமும் தங்கலான் திரைப்படம் தான் என சொல்லப்படுகிறது. விக்ரம் கேரியரில் தங்கலான் திரைப்படம் மிக முக்கியமானதாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தங்கலான் வெளியாகும் நேரம் தலைவர் 170 படமும் ரிலீஸானால் அது சிக்கலாகிவிடும் என விக்ரம் யோசித்து வருகிறாராம்.
இதன் காரணமாக தான் சம்பளம் அதிகம் என்றாலும் துணிந்து நோ சொல்லிவிட்டாராம் விக்ரம். இதனையடுத்து விக்ரமிற்குப் பதிலாக ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுன், அப்படியே தலைவர் 170ல் கமிட்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் படம் மீது இருக்கும் அதீத நம்பிக்கையில் மிகப்பெரிய வாய்ப்பை விக்ரம் மறுத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!