தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் தான் 'வெண்ணிலா கபடி குழு'. இப்படம் தான் விஷ்ணு விஷாலுக்கும், சூரிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை அவர்களது சினிமா வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது இப்படத்தில் அவர்களுக்கு நண்பர்களாக நடித்த ஏனைய நடிகர்களையும் எம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. அந்தவகையில் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்த ஒருவர் தான் ஹரி வைரவன். இவர் 'குள்ளநரி கூட்டம்' என்ற படத்திலும் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்திருந்தார்.
அத்தோடு உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் சமீபத்தில் தான் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் மறக்க முடியாத அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் திரையுலகினர் உதவ வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் குரல்கொடுத்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால், ஹரி வைரவனின் குழந்தையின் கல்விச் செலவை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அதாவது 'கட்டா குஸ்தி' படத்தின் ரிலீசுக்கு பின் திரையரங்குகளுக்கு விசிட் அடித்து வரும் விஷ்ணு விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார். அப்போது தான் இது பற்றிக் கூறி இருக்கின்றார்.
அதாவது "ஹரி வைரவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். கடைசி ஆறு மாதங்களாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை கடந்த ஆறு மாதங்களாக நான் செய்து வந்தேன்.
அதுமட்டுமல்லாது அவரது மனைவியிடமும் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் உள்ளது" எனக் கூறி இருக்கின்றார்.
மேலும் "என்ன எப்பவும் மாப்ளனு தான் ஹரிவைரவன் கூப்பிடுவாரு. அந்த மெசேஜில் தேங்க் யூ மாப்ள, நீ எனக்கு உதவி செய்றது ரொம்ப சந்தோஷம் என சொல்லி இருந்தார்” என ரொம்பவும் எமோஷனலாக பேசி இருந்தார் விஷ்ணு விஷால்.
Listen News!