நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் சந்திரமுகி 2. முன்னதாக ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை இயக்கிய பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார். ரஜினியின் கேரியரில் மிகச்சிறந்த படமாக அமைந்தது சந்திரமுகி. இந்தப் படத்தில் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் நயன்தாராவின் பிரெஷ் லுக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைசூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளார் பி வாசு. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மைசூருவில் வரும் 17ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த சூட்டிங் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் இதையடுத்து பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் 10 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் அதனுடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே படம் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது சந்திரமுகி 2. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படமும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!