ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கங்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.திரையரங்க வாயில்களில் கட்டவுட்டுகளும் பேனர்களும் நிரம்பி வருகின்றன.
துணிவு படம் குறித்து அப்படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் ஆகியோர் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வந்தனர். இப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது. படம் செம்ம மாஸாக இருப்பதாக முதற்கட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், துணிவு படத்தின் இடம்பெறும் வசனம் ஒன்று இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு... உங்க வேலைய இங்க காட்டாதீங்க” என வசனம் ஒன்றை பேசி உள்ளார்.
இந்த வசனம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துணிவு படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.
அஜித் நடித்துள்ள துணிவு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் என்பதால், இது உங்கள் செய்கை தானா அமைச்சரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனி வரும் நாட்களில் இது என்னென்ன சர்ச்சைகளை உருவாக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!