மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் வரும் 29ம் தேதி ரிலீஸாகும் நிலையில், படத்தின் ஆன்லைன் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.இப்படத்தில் வடிவேலு, மிக அழுத்தமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.வடிவேலுவுடன் உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதேபோல், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மாமன்னன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வடிவேலு பாடிய 'ராசாக் கண்ணு' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற பாடல்களும் மாமன்னன் ட்ரெய்லரும் வெளியாகின. இந்நிலையில், மாமன்னன் படத்தில் ராசாக் கண்ணு பாடலை பாடிய அனுபவம் குறித்து வடிவேலு பல பேட்டிகளில் பேசி வருகிறார்.
முதலில் ஏஆர் ரஹ்மான் இசையில் பாட பயந்ததாகவும், ஆனால், உதயநிதி தான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்ததையும் கூறினார். அதேபோல், ஏஆர் ரஹ்மான் தன்னை அவர் அருகிலேயே அமர வைத்து ஒவ்வொரு வரியாக பாட சொல்லிக்கொடுத்ததாகவும், அதனால் தான் இப்பாடல் ஹிட்டானது என்றும் விபரித்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜாவின் இசையில் முதன்முறை பாடிய அனுபவம் குறித்தும், அவருடனான உறவு பற்றியும் ஒரு பேட்டியில் வடிவேலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு, இளையராஜாவின் சிஷ்யர் தான் ஏஆர் ரஹ்மான். இரண்டு பேருமே சீனியர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பாடிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். 1995ம் ஆண்டு வெளியான எல்லாமே என் ராசாதான் படத்தில் இடம்பெற்ற 'எட்டணா இருந்தா' என்ற பாடல் மூலம் தான் வடிவேலு பாடகராகவும் அறிமுகமானார். இப்பாடலுக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
இப்பாடலை பாடும் போது இளையராஜா பக்கத்தில் இருந்து பார்க்கவில்லை என்றும், அவரது உதவியாளர்கள் தான் பாடலை ரெக்கார்டிங் செய்ததாகவும் வடிவேலு கூறியுள்ளார். ஆனால், ஏஆர் ரஹ்மான் அப்படியில்லாமல் பக்கத்தில் இருந்து கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்த மாதிரி ஒவ்வொரு வரியையும் பாட வைத்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் இளையராஜாவிடம் தொடங்கிய இசைப் பயணம் தற்போது ஏஆர் ரஹ்மானிடம் வந்து நிற்கிறது எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!