நடிகை அல்போன்சாவின் சகோதரியான ஷோபா பல ஆண்டுகளாக வளசரவாக்கத்தில் 'பிளாஷ் கன்சல்டேஷன்' என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் மூலமாக மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி வந்தார்.
இதனையறிந்த பலரும் தங்கள் உறவினர்களுக்கும் வேலை வாங்கி தருமாறு கூறி ஷோபாவிடம் பணம் கொடுத்துள்ளார்கள். சில மாதங்கள் கழித்து பணம் கொடுத்தவர்கள் பலரும் வேலை ஏன் இன்னும் வரவில்லை எனக் கேட்டிருக்கின்றனர். அதற்கு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி காலத்தை கடத்தி வந்திருந்தார் ஷோபா.
அதுமட்டுமல்லாது வெற்றிக்கொடிகட்டு படம் போன்று அலுவலகத்தை இடத்துக்கிடம் மாற்றியிருக்கிறார். அதாவது வளசரவாக்கத்தில் இருந்த தனது அலுவலகத்தை நொளம்பூருக்கு மாற்றியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலரும் வாட்ஸ்அப் குழு உருவாக்கி பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இறுதியாக நொளம்பூரில் அவரின் அலுவலகம் இருப்பதை கண்டறிந்து ஷோபாவிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போதும் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடித்துள்ளார் ஷோபா. அதுமட்டுமல்லாது பணம் வாங்கிய அனைவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.
மார்ச் மாதம் நெருங்கியதும் எல்லோரும் தங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற சந்தோசத்துடன் நொளம்பூர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கும், அலுவலகத்தை ஷோபா காலி செய்துள்ளார். அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மே மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஷோபா மீது பாதிக்கப்பட்ட பலரும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 மாதங்களாக ஷோபாவைத் தேடி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கேளம்பாக்கத்தில் உள்ள விடுதியில் அவர் தங்கியிருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். ஷோபா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரால் மோசடி செய்யப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகையின் சகோதரியே இப்படி செய்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
Listen News!