கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான 'செந்தமிழ் பாட்டு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் மலையாள நடிகர் கசான் கான். இதைத்தொடர்ந்து, கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், சிந்து நதி, டூயட், வல்லரசு, உள்ளிட்டா பல படங்களில் வில்லனாக தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக விஜய்யுடன் பத்ரி மற்றும் பிரியமானவளே போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரியமானவளே படத்தில் சிம்ரனுக்கு முறைமாவனாக நடித்திருந்த கசான் கான், 7 டைம்ஸ் 7 டைம்ஸ் என தன்னுடைய ஆம்ஸை உயர்த்தி காமெடி செய்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. இவர் கடைசியாக தமிழில் 'பட்டைய கிளப்பு' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்தார். அந்த வகையில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான லைலா ஓ லைலா என்கிற படத்தில் நடித்தார்.இதைத் தொடர்ந்து பிசினஸில் ஆர்வம் காட்டிய கசான் கான், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
திரையுலகில் இருந்து ஒரேயடியாக விலகிய இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை பிரபல மலையாள தயாரிப்பாளர், என்.எம்.பாதுஷா சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் இவருக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!