ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்த தகவலானது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்லாது ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் அதிகளவில் எழுந்து வருகின்றது.
இதன் காரணமாகத் தான் தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. ஆனால் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியால் சட்டமானது காலாவதியாகிப் போனது.
இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் ஆன்லைன் ரம்மி சம்பந்தமான விளம்பர படங்களில் நடிப்பதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தவகையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் "இசையமைப்பாளர் பிரேம்ஜி, நடிகர் சரத்குமார் ஆகியோர் ஆன்லைன் ரம்மி சம்பந்தமான விளம்பர படங்களில் நடித்துள்ளது இளைஞர்கள் மத்தியில் அதிக உத்வேகத்தை ஏற்படுத்தும்.
நடிகராக மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவராகவும் உள்ள சரத்குமார் சுய லாபத்திற்காக இப்படிப் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை யாராலும் ஏற்க முடியாது. எனவே பிரேம்ஜி மற்றும் சரத்குமார் நடித்த விளம்பரத்தை யூ-டியூப்பில் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது "காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்" எனவும் வழக்கறிஞர் தமிழ் வேந்தன் தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளமை ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!