பாலிவூட் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் தான் அமிதாப்பச்சன்.இவர் தற்பொழுது திரைப்படங்களைத் தாண்டி விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார்.இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லியில் இருக்கும் சுதந்திர மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேசியக்குழு அமிதாப்பச்சனுக்கு எதிராக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "நீங்கள் விளம்பரப்படுத்தி இருக்கும் பிஸ்கட் கோதுமையில் தயாரிக்கப்பட்டது என்று கூறியதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் வீட்டில் சமைத்த தரமான சத்தான உணவுகளை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இது இருக்கிறது.
பிஸ்கட் அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக சோடியம் ஆகியவற்றால் ஆனது. இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல. உலக சுகாதார அமைப்பு வரையறுக்கப்பட்ட விதிகளில் இது இல்லை. குழந்தைகளைத் தாக்கும் அதிக உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இன்னும் எதிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் நோய்களுக்கும் எளிதில் வழி வகுக்கும்.
அதனால் இந்த விளம்பரம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பாதிக்கும் என்று அஞ்சுகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்கடிதத்திற்கு அமிதாப்பச்சன் தரப்பிலிருந்து இன்னும் பதில் அளிக்கவில்லை. இதனால் அடுத்த வாரம் 2ம் கடிதத்தை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.
Listen News!