நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது.இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்திலும் நடிகர் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் தயாராகி வரும் சூழலில், இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் மிஷ்கின் வெளியிட்டிருந்த சூழலில், லியோ படத்தில் அவர் நடித்ததற்கு நன்றி சொல்லி இயக்குநர் லோகேஷ் ட்வீட் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், மற்றொரு பிரபல இயக்குநர், லியோ படத்தில் தனது காட்சிகளில் நடித்து நிறைவு செய்துள்ளது குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வரும் சூழலில், அங்கே நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கெளதம் மேனன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதே போல லியோ படக்குழுவுடன் தனது பிறந்தநாளையும் சமீபத்தில் கொண்டாடி இருந்தார் கெளதம் மேனன்.
இந்த நிலையில், காஷ்மீரில் லியோ படத்திற்கான கெளதம் வாசுதேவ் மேனன் காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள கெளதம், சென்னை திரும்பி உள்ள சூழலில் அடுத்து தான் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளுக்காக படத்தின் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைய உள்ளதாகவும் மேலும் தகவல்கள் கூறுகின்றது.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!