ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.
இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனைத் தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். அத்தோடு இதில், கிஷோர் ஏற்கனவே எலிமினேட் ஆகி இருந்தார். மீதியுள்ள 9 பேரில் ஷிவாங்கி இமியுனிற்றி வென்று எலிமினேஷனில் இருந்து தப்பிக்க, மற்ற 8 போட்டியாளர்களும் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர்.
இதிலிருந்து இறுதி எலிமினேஷன் சுற்றுக்கு காளையன், விசித்ரா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் வந்திருந்தனர்.மேலும் இதில், ஸ்ருஷ்டி Safe Zone போனதாக அறிவிக்க, விசித்ரா மற்றும் காளையன் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியில், இந்த வாரம் நடிகர் காளையன் எலிமினேட் ஆனதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார்.
பொதுவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜிபி முத்து, புகழ் என தன் கையில் சிக்கும் அனைவரையும் விளையாட்டுக்காக அடித்தும், அவர்களை மிகவும் ஜாலியாக தூக்கி செல்லும் காளையனின் செயல்களை பலரும் விரும்பி பார்க்கின்றனர். இதனால், காளையன் வரும்போதே பல கோமாளிகள் ஓடி ஒளியவும் செய்வார்கள். ஒரு பயங்கரமான ஆளாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் இருந்து வரும் சூழலில் அவர் எலிமினேட் ஆனது ஜிபி முத்து, புகழ் உள்ளிட்ட அனைவரையும் கலங்க வைத்திருந்தது.
தான் எலிமினேட் ஆனது பற்றி பேசிய காளையன், "இங்க எல்லாரையும் விட்டுட்டு போறதுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. புகழ், ஜிபி முத்துன்னு எல்லாரையும் தான். தூங்கும்போது கூட கனவுல வருது" என குக் வித் கோமாளி நிகழ்ச்சியை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசி இருந்த புகழ், "அண்ணன் சும்மா அடிக்கிறாங்க, அடிக்கிறாங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், வெளிய நிக்கும் போது அண்ணன் கேப்பாரு, நான் பண்றது எல்லாம் ஓகேவா? நீ உடம்பை எல்லாம் நான் தூக்கும்போது வளைச்சு கொடு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை சிரிக்க வைக்க முடியும்ன்னு சொல்லுவாரு" என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் பேசி இருந்த ஜிபி முத்து, "ரொம்ப கஷ்டமா இருக்கு இங்க ஒன்னு பண்ணிட்டு வெளியே போகும் போது, தங்கம் வலிக்குதா, தடவி விடவான்னு அண்ணன் கேப்பாரு. அதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்போ பிரிஞ்சு போறது தான் சங்கடமா இருக்கு" என கூறினார்.
Listen News!