சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு, அப்பா, அம்மாவுடன் ஜாலியாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜூம், அப்பாவாக நாசரும் நடித்துள்ளனர். இவர்களின் மகனாக நடித்திருக்கும் லாரன்ஸ் பல இடங்களில் குழந்தைத் தனமாக இருக்கிறேன் என்று செய்யும் சில காட்சிகள் செயற்கைத் தனமாக இருக்கிறது.
முதல் பாதி ஆட்டம், பாட்டம் என மிகவும் அமைதியாக போகிறது. இரண்டாம் பாதி, பழிவாங்குதல், சண்டை என வழக்கமாக ராகவா லாரன்ஸ் படங்களில் வருவது போல கிளைமாக்ஸில் பேயாட்டம் ஆடி எதிரிகளை தும்சம் செய்து அழிக்கிறார். தனது ரசிகர்களுக்காகவே இரண்டு பாட்டில் சும்மா அதிரடியாக ஆட்டம் போட்டுள்ளார். அதே போல, சண்டையிலும் மிரட்டி இருக்கிறார்.
ஹீரோவாக மாஸ் படங்களில் நடித்து வந்த சரத்குமார் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். அவரது முகத்தில் கடுமையும், கொடூமையும் தெரிவதால், இனிமேல் சரத்குமாருக்கு வில்லன் வாய்ப்பு தேடி வரவாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு பூமி என்ற கொடூர வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமான சரத்குமார் ஹீரோவாக அறிமுகமாகி மீண்டும் வில்லனாகவே இப்படத்தில் மாறி இருக்கிறார்.
இப்படத்தில் ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. பாடல் காட்சி, பைக் ரேஸ் காட்சி, சண்டை காட்சி அனைத்திலும் ஒரு குறை சொல்லமுடியாத அளவுக்கு பக்காவாக செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். எல்லாம் நன்றாக இருந்தாலும் கதை என்று வரும் போது தூக்கம் வருகிறது. பாதி படத்திற்கு மேல் பாடாவதி படம் பார்ப்பது போல தோன்றுகிறது. இயக்குநர் கதிரேசனுக்கு இது முதல் படம் என்பதால் கவனத்துடன் படத்தை எடுத்திருக்கலாம். ராகவா லாரன்ஸ் மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர்.
பொழுதுபோக்கு பாதி, அறுவை பாதி தான் ருத்ரன் திரைப்படம். க்ளைமேக்ஸ் காட்சியில் டான்ஸ் கம் ஃபைட் வருகிறது அதை ஸ்டண்ட் சில்வா மிகவும் பிரம்மாதமாக செய்திருக்கிறார். ருத்ரன் படத்தை குடும்பத்துடன் போய் ஒரு தடவை பார்க்கலாம் என்று இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Listen News!