மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட குழப்பத்தால் பலமுறை இடைநிறுத்தப்பட்டு இறுதியில் குறுகிய நேரத்திற்குள் நிறைவடைந்தது.
விழா ஏற்பாட்டாளர்களின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறுகளே இந்த நிகழ்வு இடைநிறுத்தப்படுவதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
இசை நிகழ்ச்சி ஆரம்பமாகி குறுகிய நேரத்திலேயே அங்கு குழப்பநிலை உருவானது. அங்குள்ள இருக்கைகள், திரை போன்றவற்றில் சரியான முகாமைத்துவம் இன்மையால் பலர் பணத்தை செலவழித்து நுழைவுச்சீட்டை பெற்ற போதும் நிகழ்ச்சியை நிறைவாகப் பார்க்க முடியாத அவலம் ஏற்பட்டது.
மேலும், மேடைக்கு நடுவே வைக்கப்பட்ட பாரிய கொட்டில்கள் பார்வையாளர்களை சிரமப்படுத்தியுள்ளது. மேடையே தெரியாத அளவிற்கு உயரமான கொட்டில்கள், திரைகளும் ஒடுங்கிய சிறிய திரைகள் காணப்பட்டமையால் ரசிகர்கள் குறுகிய நேரத்தில் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
47 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரிக்கட் வழங்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் அங்கு அந்தளவு மக்களை அடக்குவதற்கான ஒழுங்கமைப்பு இல்லாமையால் 25000 ரூபா, 7000 ரூபா ரிக்கெட் எடுத்தவர்கள் கூட குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் இசைநிகழ்ச்சியை நிறைவாகப் பார்க்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, முதியவர்கள், கைக்குழந்தையோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்கள் இன்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டது.
மேலும் தென்னிந்திய நட்சத்திர பட்டாளங்களே இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்தனர்.
தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். முதியவர்கள் பலர் பாதுகாப்பான இடங்களைத்தேடி ஓடியதை அவதானிக்கமுடிந்தது.
இதனால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. குறுகிய இடத்திற்குள்ளே பலர் குவியத் தொடங்க குடும்பங்களோடு வந்த
பலர் இடைநடுவிலே எழுந்துசென்றதையும் காணக்கூடியாக இருந்தது. ஏற்பாட்டாளர்கள் பலமுறை கெஞ்சிக்கேட்டு பொதுமக்களை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஒருபக்கம் அடிதடி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் நிகழ்சியும் இடம்பெற்றுக்கொண்டிருந்தது ஆனால் நிலமை கைமீறிப்போகும் நிலையை நெருங்கியதும் நிகழ்ச்சி அவசரவசரமாக நிறைவுக்குக்கொண்டுவரப்பட்டது.
Listen News!