தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருப்பார். இருந்தாலும் ஹீரோவாக நடிப்பதற்கு தொடர்ந்து முயன்று வந்தார் நடிகர் விமல். முயற்சியின் பலனாக சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் விமல். சற்குணத்துக்கு அது முதல் படமாக இருந்தாலும் முதல் பட இயக்குநர் போல் இல்லாமல் படத்தின் மேக்கிங்கையும், கதையையும் அட்டகாசமாக வடிவமைத்திருந்தார்.
களவாணியின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சற்குணத்துடன் இணைந்த விமல் வாகை சூட வா படத்தில் நடித்தார். கல்வியை அடிப்படையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் விமல். இந்தப் படமும் விமர்சன ரீதியாக ஹிட்டாக விமலின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதுவரை விமலின் நடிப்பில் வெளியான மிகச்சிற்ந்த படமாக இது கருதப்படுகிறது. பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமலுக்கு திடீரென பட வாய்ப்புக்கள் குறைந்தன. இதனால் ஒருகட்டத்தில் நடிக்காமலே இருந்தார் விமல்.
இதனையடுத்து விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் விமல். அந்த வெப் சீரிஸை பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் விமல் குலசாமி என்ற படத்தில் நடித்த்திருக்கிறார். படத்தை சரவண சக்தி இயக்கியிருக்கிறார். இப்படமானது ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இந்தப் படம் தொடர்பான விழா ஒன்று இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான அமீர் பேசுகையில், "இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.
இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோஷன் மூலம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோஷன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே" என்றார்.
Listen News!