• Sep 19 2024

"வரலாற்றின் குரலாக பின்னிப் பிணைந்தவர்".... பிரபல செய்தி வாசிப்பாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய வானொலியில் செய்தியாளராக பணியாற்றி காலைச் செய்தியை "செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி" என்று கூறி  தன் கணீர் குரலால் அனைவருக்கும் கொண்டு சென்று சேர்த்தவர் தான் ஆகாசவானி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாயாரணசுவாமி. அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர் ஒலிப்பரப்பு துறையில் பல பெண்களுக்கு முன்னோடியாக இருந்தவர்.


இவ்வாறாக செய்தி வாசிப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த இவர் பிறகு திரைத்துறையில் உள் நுழைந்து அங்கும் பல்வேறு பணிகளை செய்து வந்தார். ஒலிப்பரப்புத் துறையில் சரோஜ் நாராயணசுவாமியின் பங்களிப்பினை பாராட்டி 2009-ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கி கௌரவித்தது.



மேலும் குறிப்பாக 80களில் இவரது குரலை கேட்காதவர்களே இல்லை என கூறிவிடலாம். ஏனெனில் இப்போது மாதிரி அந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சிகள், தொலைபேசிகள் எல்லாம் எல்லோரிடமும் இருந்தது கிடையாது. இதனால் இன்றைய தலைமுறைக்கு இவர் குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் அன்றைய நாட்களில் மிகப்பெரிய ஒரு பிரபலமாக இருந்தார்.


30 ஆண்டுகளுக்கு மேலாக வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சரோஜ் நாராயணசுவாமி தனது 87-ஆவது வயதில் நேற்றைய தினம் மும்பையில் காலமானார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சரோஜ் நாராயணசுவாமி உயிரிழந்திருக்கின்றார். இவரது மறைவுச் செய்தி சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தமிழ் நெஞ்சங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



அந்தவகையில் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களும் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். அதாவது "அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து வரலாற்றின் குரலாக நிலைத்து நின்று விட்டது திருமதி சரோஜ் நாராயணசுவாமி அவர்களின் குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அவரது குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக் கொண்டதை அறிந்து மிகவும்  வேதனை அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் கூறியிருந்தார்.


முதலமைச்சரின் இந்த உணர்ச்சிபூர்வமான இரங்கலானது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் வேறு பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement